> குருத்து: December 2010

December 28, 2010

தேசம் கடக்கும் தரகு முதலாளிகளும், தற்கொலையால் சாகும் விவசாயிகளும்!


இன்று இந்து நாளிதழில்..முதல் பக்கத்தில் ஒரு அதிர்ச்சியான செய்தி வந்திருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 17368 விவசாயிகள் தற்கொலை செய்து இருக்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில், கிட்டதட்ட 2 லட்சத்திற்கும் மேலான விவசாயிகள் மாண்டு போயிருக்கிறார்கள். தொடர்ச்சியாக கேள்விபடுவதால்..இதில் என்ன அதிர்ச்சி என்கிறீர்களா? மரத்துப் போய்விட்டோம் நாம்.

இந்நாட்டில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கைகள் அமுல்படுத்த துவங்கி 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிவிட்டன. கடந்து வந்த பாதையெங்கும் விவசாயிகளின் பிணங்கள்.

மரபணு மாற்ற விதைகள், உரங்களின் கட்டுபடியாகாத விலை, அரசு கடன், அதன் மீதான வட்டி, கந்து வட்டி கும்பலிடம் கடன், இப்படி பல மலைகளை கடந்து, விளைச்சல் விளைந்து, துன்பம் தொலையும் நினைக்கும் பொழுது, பருவநிலை மாற்றம், விளைச்சல் பல்லிளிப்பது, விளைச்சல் வந்தாலும், உரியவிலை கிடைக்காதது என்பதில் விவசாயிகள் துவண்டு போகிறார்கள்.

இதே இந்தியாவில், இன்னொரு புறம், தரகு முதலாளிகளின் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடுகிறது. காரணம் - அரசு இவர்களை செல்லப்பிள்ளையாக நடத்துகிறது.

கடந்த பல ஆண்டுகளாக பெருமுதலாளிகள் வங்கிகளில் வாங்கிய கடன் 'வராக்கடன்' என தள்ளுபடி செய்கிறது. விவசாயிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் ஜப்தி, கைது நடவடிக்கைகளை தரகு முதலாளிகளுக்கு, பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிராக அரசு எடுக்க மறுக்கிறது.

39000 கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி, 20000 கோடி ரூபாய் சுங்கவரி, கலால் வரி, சேவை வரி என நிலுவையாக உள்ளதை அரசு கறாராக வசூலிக்க மறுக்கிறது.

இது தவிர, (2007 - 08) கார்ப்பரேட் வரி, கலால் வரி, சுங்க வரி என பெருமுதலாளிகள் செலுத்த வேண்டிய வரியில் 2.3 லட்சம் கோடி அரசால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. மொத்த வரியில் இதன் பங்கு 50%. மேலும், 42100 கோடி வருமான வரியை தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறடு.

இப்படி அரசு செய்கிற தள்ளுபடிகள், மானியங்கள், சலுகைகள், தன் தொழிலில் வருகிற வருமானம், வெளிநாட்டு கடன் என எல்லாம் சேர்ந்து, கடந்த சில ஆண்டுகளில், தரகு முதலாளிகள் வெளிநாட்டு நிறுவனங்களை நாளும் வாங்கி குவித்து, தேசங்கடந்த தரகு முதலாளிகளாக பரிணாமம் பெற்றிருக்கிறார்கள்.

டாட்டா குழுமம் கோரஸ் உருக்காலையை (13000 கோடிக்கு) வாங்கியிருக்கிறது. இது தவிர, டாட்டா குழுமத்திற்கு இங்கிலாந்தில் மட்டும் 18 நிறுவனங்களை வாங்கியிருக்கிறார்கள். பிர்லா குழுமத்திற்கு ஆஸ்திரேலியாவிலும், ஆப்பிரிக்காவிலும் இரும்பு தாது சுரங்கங்கள் இருக்கின்றன.

தரகு முதலாளிகள் பற்றிய இந்த செய்தி எல்லாம், பழைய செய்திகள். புதிய செய்திகள். 2ஜி அலைக்கற்றை விவகாரம் புதியது. ராசா வருமான இழப்பு ஏற்படுத்தி விட்டார் என ஊடகங்கள் மீண்டும் மீண்டும் பேசுகின்றன. இதில் பல கோடிகளை சுருட்டி ஏப்பம் விட்டது தரகு முதலாளிகள் தான். டாடா, அம்பானி எல்லாம் களவாணிகள் என ஊடகங்கள் பேச மறுக்கின்றன. ஊடககாரர்களே தரகர்களாக தானே செயல்படுகிறார்கள்.

தனியார் மயம், தாராளமயம், உலகமயம் கொள்கைகள் தரகு முதலாளிகளை 15 ஆண்டுகளில் பல்லாயிரம் கோடிகளில் கொழிக்க வைத்திருக்கிறது. மறுபுறம் விவசாயிகள் தற்கொலையில் செத்துமடிகின்றனர். இந்த மக்கள் விரோத கொள்கைகளை நாம் முறியடிக்காமல், இவர்களை வீழ்த்த முடியாது. நம் விவசாயிகளையும் காப்பாற்றமுடியாது.

தொடர்புடைய சுட்டிகள் :
ஸ்பெக்ட்ரம் ஊழல் - மறுகாலனியாக்கத்தின் பம்பர் பரிசு! - வினவு
17,368 farm suicides in 2009 - சாய்நாத் - இந்து நாளிதழ் - 28/12/2010

2 ஆண்டில் 143 அமெரிக்க நிறுவனங்களை இந்திய நிறுவனங்கள் வாங்கி சாதனை

Tata steel gets corus boost, net at Rs. 12322 Cr. - Financial Express

One Farmer's sucide Every 30 minutes - பத்திரிக்கையாளர் சாய்நாத்

December 27, 2010

வாக்களித்த பதிவர்களுக்கு நன்றி!



தமிழ்மணம் நடத்துகிற போட்டியில், முதல் சுற்றில் குருத்து தளம் கலந்து கொண்ட கீழ்க்கண்ட மூன்று பதிவுகளும் தேர்வாகியிருக்கின்றன.

பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் பிரிவில்...

வாங்கப்படாத பிறந்தநாள் கேக்!

அரசியல், சமூக விமர்சனங்கள் பிரிவில்...

ஏழாம் நாளிலும் மார்ச்சுவரியில் காத்திருந்த ஜிதேந்தர்!

நூல் விமர்சனம், அறிமுகம் பிரிவில்...

நான் வித்யா - புத்தக அறிமுகம்!

குருத்து தளம் கலந்துகொண்ட மூன்று பதிவுகளிலும், ஒடுக்கப்பட்டவர்களாகிய தொழிலாளர்கள் மற்றும் திருநங்கை லிவிங் ஸ்மைல் வலி மிகுந்த வாழ்க்கை பதிவாகியிருக்கிறது. பல்வேறு தலைப்புகளில், பல்வேறு கருத்துகளில் எழுதிய பதிவுகள் போட்டியிடுகின்றன. பின்னாடி தள்ளப்பட்டுவிடுமோ என்ற எண்ணம் இருந்தது. ஆனால், முதல் சுற்றில் பதிவர்கள் வாக்களித்து அங்கீகாரம் தந்து இருக்கிறார்கள்.

வாக்களித்த பதிவர்களுக்கு என் அன்பு நன்றிகள். தேர்வாகியுள்ள மற்ற பதிவர்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,

குருத்து.

December 21, 2010

ஆத்தங்கரையோரம்! - நாவல் அறிமுகம்!


முன்குறிப்பு : சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாவலை எங்கள் பகுதியில் உள்ள நூலகத்தில் கிடைத்து படித்தேன். அரசு நூலகங்களில் அரைமணி நேரம் 300 புத்தகங்கள் தேடினால்...ஒரு நல்ல நாவலையோ, சிறுகதை தொகுப்பையோ கண்டுபிடிக்கலாம். இறையன்புவின் எழுத்து எழுதுகிற முறையில் நன்றாக ஈர்க்க கூடியது. இந்த நாவல் மக்கள் போராட்டத்தைப் பற்றிய நாவல் என்பதால் இன்னும் கூடுதல் ஆர்வம். எழுதியது ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தானே என புறந்தள்ளிவிட முடியாத படைப்பு. மகா நன்றாக அறிமுகப்படுத்தி இருக்கிறார். உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

****
"அருமையான நாவல் படியுங்கள்" என நண்பர் தந்தார். படிக்க துவங்கி, இரண்டு நாள்களில் முடித்துவிட்டேன். நான் வெகுவிரைவாக படித்த நாவல்களில் இதுவும் ஒன்று.

ஒரு ஆறு. அதன் குறுக்கே அணைக்கட்ட அரசு தீர்மானிக்கிறது. எழும் அணையால் பல கிராமங்கள் நீரில் காணாமல் போகும் நிலை. அரசு அங்கு வாழும் பழங்குடி கிராம மக்களை அப்புறப்படுத்த முயல்கிறது. பாதிக்கப்படும் மக்கள் அரசை எதிர்த்துப் போராடுகிறார்கள் என நகர்கிறது நாவல்.

பழங்குடி மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை, அரசின் பிரதிநிதிகள் மக்களுக்கு மாற்று வாழ்வாதாரம் உருவாக்கி தருகிறோம் என ஏமாற்றி அப்புறப்படுத்துவது, ஏற்கனவே அங்கிருந்து நகர்த்தப்பட்ட மக்கள் நகரங்களில் அகதிகளாய் அலைவது, நகர மறுக்கும் மக்களின் எதிர்ப்பை அரசு எப்படி கடுமையாக ஒடுக்குகிறது என நாவல் பல விசயங்களை அழுத்தமாக, உணர்வுபூர்வமாக பதிவு செய்திருக்கிறது.

என்.ஜி.ஓக்களுடன் இணைந்து மக்கள் போராடுகிறார்கள். ஓர் இடத்தில் ஒரு அரசு அதிகாரி சொல்வார் "இந்த போராட்டம் மட்டும் நக்சல்கள் கையில் போயிருந்தால்...போராட்டத்தின் திசை வேறு மாதிரி போயிருக்கும்". உண்மை தான். போலீசு, இராணுவம் என கொண்டிருக்கும் சர்வ அதிகாரம் கொண்ட மக்கள் விரோத அரசை எதிர்த்து போராடி, ஜெயிக்க வேண்டுமென்றால், சமரசம் செய்து கொள்ளாத, உழைக்கும் மக்களின் நலன் மீது அக்கறை கொண்ட, சமூக மாற்றத்தை நோக்கமாக கொண்டுள்ள ஒரு புரட்சிகர கட்சி இருந்தால் மட்டுமே சாத்தியம். நாவலை படித்து முடிக்கும் பொழுது, அந்த முடிவுக்கு நீங்கள் நிச்சயம் வந்தடைவீர்கள்.

படிக்கும் பொழுது, நர்மதா நதியின் குறுக்கே கட்டப்படும் அணைக்கு எதிராக பல ஆண்டுகளாக மக்கள் நடத்தும் போராட்டம் தான் நினைவுக்கு வந்தது.

சின்ன சின்ன வெளிச்சங்கள், கட்டுரை தொகுப்புகள் என இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய புத்தகங்களை வாசித்திருக்கிறேன். இந்த நாவலை தயங்காமல் அவருடைய 'மாஸ்டர் பீஸ்' என்பேன். நாவல் வெளிவந்து ஆண்டுகள் பலவாகிவிட்டன. நியூ செஞ்சுரி புக ஹவுஸ் வெளியிட்டு இருக்கிறார்கள்.

பின்குறிப்பு : அணையோ, வளர்ச்சியோ வேண்டுமென்றால், சில ஆயிரம் மக்கள் பாதிக்கப்படத்தான் செய்வார்கள் என ஒற்றை வரியில் கடந்து போனீர்கள் என்றால்...சிரமம். நீங்கள் எழுப்புகிற பல கேள்விகளுக்கு நாவல் விடை தரும். நாவலை படித்துவிட்டு வாருங்கள். நாம் விவாதிக்கலாம்.


நன்றி : நந்தவனம்

December 18, 2010

இன்று ஸ்டாலினின் 131வது பிறந்த தினம்!


*****

தோழர் ஸ்டாலின் பிறந்தநாளை எப்படிக் கொண்டாடலாம்?

தோழர் ஸ்டாலின் பிறந்தநாளை
எப்படிக் கொண்டாடலாம்?
யோசனையோடு நடந்து போனேன்,

இனிப்பு வாங்கி
இயன்றவரை கொடுக்கலாமா…

எஸ்.எம்.எஸ். அனுப்பி
நண்பர்களிடம் பகிரலாமா…

புத்தாடை உடுத்தி
சேர்ந்துண்டு மகிழலாமா…

ஒரு இசை…
ஒரு கவிதை…
ஒரு நிகழ்ச்சி…

ஏதாவது ஒன்று என்ற எனது நினைவுகளைக் கலைத்தது
கூவக்கரையோரம் பிய்த்தெறியப்பட்ட
குடிசைப் பகுதியிலிருந்து ஒரு குரல்;

“டேய் உழைக்காத உங்களுக்கு இவ்ளோன்னா,
எங்களுக்கு எவ்ளோ இருக்கும்.
அடிச்சா புடுங்குறீங்க… இப்படியே போயிடாது
உங்களுக்கு இருக்குடா ஒருநாள் வேட்டு!”

அடக்கும் லத்திக்கம்பை விலக்கித் தெறித்தது
அந்தப் பெண்ணின் குரல்

இப்போது கற்பனை குறுகுறுத்தது.
ஸ்டாலின் பிறந்தநாளை எப்படிக் கொண்டாட வேண்டும் என்பது
அந்தப் பெண்ணின் எதிர்ப்பார்ப்பில்
மண்டையில் உரைத்தது.

தோழர் ஸ்டாலினுக்கு யாரைப் பிடிக்கும்?

தோழர் ஸ்டாலினை எனக்குப் பிடிக்கும்
என்பது சரிதான்,
ஆனால் ஸ்டாலினுக்கு யாரைப் பிடிக்கும்?

படிக்கும் மாணவப் பருவத்தில்
மதம்பிடிக்கும் கருத்துக்களை
நீங்கள் வெறுப்பவரா…

துடிக்கும் இளமையின் காதலை
நீங்கள்
போராடும் தொழிலாளி வர்க்கத்திடம் போய் சேர்ப்பவரா…

கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி
தன்னலம், தன்குடும்பம் என நெருக்கும்
தாய், தந்தை கண்ணீரையும் உடைக்கும்
சமூகபாசம் படைக்கும் நபரா நீங்கள்…

சாதியெனும் பரம்பரை அழுக்கை
முதலில்
தன்முதுகில் சுரண்டி எறிய
சம்மதிப்பவரா நீங்கள்…

பாட்டாளிவர்க்க விடுதலை லட்சியத்திற்காக
கூடவே வந்த பலர் பாதிவழி போனாலும்…
“ஊர்வம்பு நமக்கெதுக்கு, நம் வழியைப் பார்ப்போம்” என
சொல்லிப்பார்த்து உறவுகள் தள்ளிப்போனாலும்…
எதிர்ப்பின் ஏளனம், துரோகத்தின் கவர்ச்சி
உரிய வர்க்கமே இன்னும் உணராமல்… தனியாய் ஆனாலும்
உலகத்தின் மரியாதையே
தன் கையிலெடுப்பதாய் நினைத்து…
உழைக்கும் மக்களின் உயரிய வாழ்வுக்காய்
கம்யூனிச இதயமாய் துடித்து…
ஓயாமல் போராடும் மனிதரா நீங்கள்…

உங்களைத்தான்
அட! உங்களைத்தான்
தோழர் ஸ்டாலினுக்குப் பிடிக்கும்!

-துரை.சண்முகம்

நன்றி : வினவு

பின்குறிப்பு : முழுக்கவிதையையும் படிக்க இந்த இணைப்பை பாருங்கள்.

December 13, 2010

தீண்டாத வசந்தம் - புத்தக அறிமுகம்!


எப்பொழுதும் படிக்கின்ற ஆள் இல்லை நான். ஆனால் எப்பொழுதாவது படிப்பேன். அப்படி ஒரு நாள் தோழர் இராமநுஜம் கொடுத்த ஒரு நாவல் படித்தேன். பெயர் - தீண்டாத வசந்தம். தெலுங்கில் ஜி.கே. கல்யாணராவ். அதை அழகாக தமிழில் தந்துள்ளார் எ.ஜி. எத்திராஜீலு.

இந்த நாவல் படிக்க ஆரம்பித்தவுடன் வேகமாக படிக்க தூண்டியது. ஆனால் படிக்க, படிக்க ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. இப்படி எல்லாம் கூட சக மனிதர்களை, மனிதர்களை கேவலமாக நடத்த முடியமா என்று.

இந்நூல் முழுக்க தீண்டாமையும், அதன் கொடுமையும் குறித்து எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் ஏறக்குறைய 5 தலைமுறையின் தலித் மக்களின் அவல வாழ்க்கை குறித்து சொல்லப்பட்டுள்ளது.

எனக்கு பள்ளியில் படித்த காலங்களில் வரலாறு அவ்வளவாக வராது (அவ்வளவாக வராதா - அவ்வளவும் வராதா?) ஆனால் இந்த புத்தகம் படித்ததும் எனது முன்னோர்களின் வரலாற்றை படித்த உணர்வு என்னுள் எழுந்தது.

இந்நூலில் வரும் நாயகன், அவ்வூரில் உள்ள தீண்டாமை கொடுமையை மீறி அழகான பாடல்கள் இயற்றியும் தெருக்கூத்துக்கள் நடத்தியும் தன் இனம் சார்ந்த மக்களை மகிழ்விக்கிறான். ஆதிக்க சாதியினர் மட்டும் அருகில் அமர்ந்து பார்த்த மகிழ்ந்த தெருக்கூத்துக் கலையை எட்ட இருந்து கூட பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட தன் இனமக்களுக்காகவே அக்கலையை கற்று பல பாடல்கள் இயற்றி, தெருக்கூத்துக்கள் நடத்துகிறான்.

தீண்டாமையின் கோர முகம், கொடுமை இந்நூல் படிப்பவர்களின் இதயத்தில் வலி ஏற்படுத்துவதை தவிர்க்க இயலாத ஒன்று. இந்நூலில் நாயகனின் மகனும், அவனது மனைவியும் (பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்) பஞ்சத்தால் படாத படுகிறார்கள். பஞ்சம் என்றால், மக்கள் உணவு இல்லாமல், பட்டினியால் கொத்து, கொத்தாக செத்து போகிறார்கள். தன் கண் முன்னே பட்டினியால் இறந்து போன தன் தாத்தா பாட்டி, அப்பா அம்மா ஆகியோரை தன் சொந்த ஊரில் புதைத்து விட்டு, வேறு ஊருக்கு வேலைதேடி செல்கிறான். வழியில் அவன் மனைவி நோய்வாய்பட அவளை எப்படியும் காப்பாற்றிட வேண்டும் என எண்ணி பாக்கிங்காம் கால்வாய் தோண்டும் இடம் நோக்கி நடந்தே செல்கிறான். வழியெல்லாம் மக்கள் பட்டினியால் பஞ்சத்தால், செத்துக்கிடக்கின்றனர். படாத பாடுபட்டு அங்கு சென்று அங்குள்ள மேஸ்திரியிடம் வேலை கேட்கிறான். நீ யார்? என்ன சாதி என்று மேஸ்திரி கேட்கிறான். அவன் தன் பெயரையும், சாதி பெயரையும் கூற உடனே மேஸ்திரி, பறை நாய்களுக்கு இங்கு வேலை இல்லை போடா என்று கூற, இதை கேட்ட மற்ற ஜாதி மக்கள் அவனையும், அவன் மனைவியையும் அடிக்க பாய, அவன் தன் மனைவியையும் உயிரையையும் கையில் பிடித்து கொண்டு ஓட, ஆதிக்க ஜாதி மக்கள் விரட்ட அப்பப்பா, என்ன ஒரு கொடுமை. இதே கொடுமை அடுத்தடுத்த தலைமுறைக்கு தொடர்கிறது.

இதற்கிடையில் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் இக்கொடுமை ஒழியும் என்று நினைத்து சிலர் மதம் மாறி - அதிலும் கொடுமை தொடரத்தான் செய்கிறது.

இதுபோன்ற கொடுமைகள் இந்த நாவல் முழுக்க அனைத்து தலைமுறையிலும் தொடர்கிறது.

எனக்கு சிறுவயதாக இருக்கும் பொழுது என் அப்பாவும், அத்தையும், அவர்களுக்கு சொந்த ஊரில் நடந்த தீண்டாமை குறித்து சொல்வார்கள். எனக்கு புரியாது. ஆனால் அது எவ்வளவு மோசமானது என்று இப்பொழுது யூகிக்க முடிகிறது.

இந்த கொடுமை இன்னும் தொடரவே செய்கிறது. இதற்கு காரணம் என்ன?

ஏன் இப்படி?

அம்பேத்கார் சொன்னது தான் :

"ஆடுகளைத் தான் பலியிடுகிறார்கள்; சிங்கங்களை அல்ல."

- சமுலா

தோழமை 2010 இதழிலிருந்து.....

தீண்டாத வசந்தம் - எழுத்தாளர் ஏ.ஜி. கல்யாணராவ்,

பக்கங்கள் : 301 விலை ரூ. 50/-

வெளியீடு : சவுத் விஷன், செல்பேசி : 94442 90820


தொடர்பான சுட்டிகள் :

தீண்டாத வசந்தம் - மனதை தீண்டிய நாவல்!

December 6, 2010

முகம் - கவிதை!

'சின்ட்ரல்லா' கவிதைக்கு பிறகு, மீண்டும் நண்பர் சுக்ரன் மின்னஞ்சலில் அனுப்பி வைத்த கவிதை. வாசிப்பவர்களின் விமர்சனங்கள் அவருக்கு தேவையாம். பின்னூட்டமிடுங்கள்.
*****

மெளனத்தை பரப்பி விரிந்து கிடக்கும் புல்வெளி
யாவற்றையும் கட்டியணைக்க
எத்தணிக்கும் பின் இரவு
ஆட்களற்றும், ஆடைகளற்றும்
விழுந்து கிடக்கும் நாம்
நிலவொளியை எடுத்து
கொஞ்சம் போர்த்திக்கொள்வோம்.
நம் இறுக்கத்தின் நடுவே
காற்றுக்கு தடையிடுவோம்.
பின்பு நேரிடும் முத்தச் சத்தத்தால்
காதுகளை பொத்திக்கொள்ளட்டும் மேகங்கள்!
நம் அசைவுகளை கண்டு
கண்கள் பொத்தும் விண்மீன்கள்
யாவரும் இவ்வாறாய் கிடக்க,
ஒரு ஓவியம் முற்றுப்பெற்றது.

உன்னை மணக்கத் துடிக்கும் தளர்ச்சியை,
பனித்துளியால் விரட்டிவிடு.
உறங்கி விடாதே! அதற்கான நொடிகள் மீதமில்லை,
தோட்டாக்களைப் போல!
கண்ணீரும், எச்சிலும் தேங்கிக் கிடக்கும்
உன் இதழ்களால்..
என் கரிய நெற்றியில் முத்தமிடு!

பின்னோரு மழை ஓய்ந்த மாலையில்
அது முடியாது போகலாம்.
என் மீதான அன்பை ஒரு பார்வையாக்கி,
சிரித்த என் முகத்தை பிரதியெடு!
நாளை மேற்கு தொடர்ச்சிய மலையடியில்
குண்டடிப்பட்டு
இரத்தமும், மண்ணும் அப்பிய முகத்தால்
அது வாய்க்காது போகலாம்!

எல்லாவற்றையும் எடுத்துச் செல் இங்கிருந்து,
நம் காதலை, கனவுகளை, முத்தங்களை...

மறந்துவிடாதே! பின்பொரு நடுநிசியில்
கண்ணாடிப் பெட்டிக்குள் நான் திரும்ப நேரிட்டால்,
என் முகத்தை அதில் தேடாதே!
இந்திய சோவியத் பள்ளிகளில்
பூக்கும் குட்டிப் புன்னகைகளில் தேடிப்பார்!

- சுக்ரன்

December 1, 2010

அம்பேத்கார் படம் வெளியாகிறது!


பல போராட்டங்களுக்குப் பிறகு, வருகிற 3ந் தேதி ஐநாக்ஸ் திரையரங்கில் ஐந்து நாட்களே காண்பிக்கப்படுகிறது. ஆல்பர்ட் திரையரங்கில் தினமும் பகல் காட்சியாகவும், . அபிராமி, சத்யம், எஸ்கேப்திரையரங்குகளில் ஒவ்வொரு சனி, ஞாயிறுகளிலும் பகல் காட்சியாக காட்டப்படுகிறது.

தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும், மகாராஷ்டிரா அரசும், மத்திய சமூக நீதித்துறையும் இணைந்து அம்பேத்கர் படத்தை தயாரித்து இருக்கிறார்கள்.

1999ல் ஆங்கிலத்தில் வெளிவந்த பிறகு, தொடர்ச்சியாக 2000-ல் இந்தியில் வெளியாகியிருக்கிறது.

2000-ம் ஆண்டுக்கான சிறந்த படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த கலை இயக்கம் பிரிவுகளில் தேசிய விருதுகளை பெற்றிருக்கிறது.

தமிழில் வெளியாக, இத்தனை ஆண்டு காலம் தேவைப்பட்டிருக்கிறது. ஒரு படம் எத்தனை பேருடைய திருமுகங்களை அம்பலப்படுத்துகிறது.

த.மு.எ.க.ச தமிழகம் முழுவதும் 100 திரையரங்குகளில் வெளியிட முயற்சி எடுக்கப் போகிறதாம். பெரியார் படத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை, அம்பேத்கார் படத்திற்கும் கொடுப்பதற்கு அரசுக்கு நெருக்கடி தரும் போராட்டங்களை கட்டியமைக்காமல் தானே முயல்வதாக சொல்வது, எந்த அளவிற்கு காரிய சாத்தியம் ஆகப்போகிறது என தெரியவில்லை.

விரிவான செய்திகளுக்கு கீழ்கண்ட சுட்டிகளை வாசியுங்கள்:

அம்பேத்கார் என்ன பாவம் செய்தார்? - உண்மைத் தமிழன் - 28/11/2010

வழக்கறிஞர் சத்யசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கு நன்றி - வே. மதிமாறன் - 29/11/2010

இணையவெளி அம்பேத்கருக்காக ஒன்றுகூடி நிற்கட்டும்! - மாதவராஜ்